ஜிஎஸ்டி பற்றி நிதியமைச்சர் சொல்வது என்ன?
இந்தியாவில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டியின் விகிதம், ரெவென்யூ நீயூட்ரல் ரேட் எனப்படும் RNRஐ விட குறைவாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதலில் ஜிஎஸ்டி வரியின் சராசரி விகிதம் 15.3%ஆக திட்டமிடப்பட்டதாகவும், அது தற்போது 12.2%ஆகவே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 9 ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.ரியல் எஸ்டேட், சுகாதாரத்துறை, ஆயுள் காப்பீடு ஆகியவற்றை வாங்குவோருக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயை அதிகரிக்க வேண்டும், அதேநேரம் எளிமையான முறையில் வரி வசூலிப்பது முக்கியம் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். வியாபாரம் செய்வதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் வகையில் ஜிஎஸ்டியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரி வசூலிப்பதில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய அரசு விரும்புவதாகவும், மத்திய அரசின் நிதி தேவை மற்றும் மக்களை நிர்வகிப்பது ஆகியவற்றில் ஒரு சமநிலை தேவை என்றும் நிர்மலா குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ஜிஎஸ்டி கட்டமைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வது முக்கியம் என்று பதில் அளித்து, மோதல் இருப்பதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் முன்பு வரை மாநில அரசுகளின் வரி வருவாய் 62.8% இருந்ததாகவும், ஜிஎஸ்டிக்கு பிறகு இந்த வரி வருவாய் 65.4%ஆக உயர்ந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது 2023 ஆண்டறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. எரிபொருள், பத்திரப்பதிவு கட்டணம், நில பதிவு, மதுபானங்கள் மீதான கலால் வரி ஆகியவை மாநிலங்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பிறகு ஜிஎஸ்டியில் இருந்து ஒரு பகுதி நிதியை அதிகம் பெறும் மாநிலங்கள் பட்டியலில் தெலங்கானா, ஆந்திரபிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.