ரிசர்வ் வங்கி ஏன் கடன் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்..?
அமெரிக்காவில் உள்ள வங்கிகளுக்கு கடன் வழங்கும் அமெரிக்க பெடரல் ரிசர்வ், தனது வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைத்துள்ளது. இதைத்தொடர்ந்து உலகின் பல நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கள் கடன் விகிதங்களை குறைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஐரோப்பிய மத்திய வங்கி இரண்டு முறையும், ஸ்விட்சர்லாந்து ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளும் படிப்படியாக கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, எப்போது கடன்கள் மீதான வட்டியை குறைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, வரும் 7 முதல் 9 ஆம் தேதி வரை நிதி கொள்கை குழு கூட்டத்தை நடத்த இருக்கிறது. நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையில் வைப்பதில் இந்த வட்டி விகிதங்கள் பெரிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் நுகர்பொருள் குறியீடான சிபிஐ கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.65%ஆக இருக்கிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வரும் 7 ஆம் தேதி தொடங்கும் நிதி கொள்கை கூட்டத்தில் ரெபோ வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 6 பேர் கொண்ட ஒரு குழு இந்த வட்டி விகிதத்தை தீர்மானிக்கும். கடந்த முறை நடந்த நிதி கொள்கை கூட்டத்திலேயே 25 அடிப்படை புள்ளிகள் குறைக்க 2 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்தியாவில் ரெபோ ரேட் எனப்படும் கடன்கள் மீதான வட்டி விகிதம் இப்போது வரை 6.5%ஆகவே இருக்கிறது. இதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வரும் 9 ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிக்கும்