சக்திகாந்ததாஸ் நீடிப்பது சந்தேகம்…
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருப்பவர் சக்தி காந்ததாஸ், இவரின் பதவிக்காலம் அடுத்தவாரம் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் அவருக்கு பதவிக்கால நீட்டிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது மட்டுமின்றி, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அண்மையில் மிகப்பெரிய அளவில் சரிந்தது. அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 5.4விழுக்காடாக குறைந்துள்ளது. இது கடந்த 7 காலாண்டுகளாக இல்லாத குறைந்தபட்ச வளர்ச்சியாகும். 7 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்த நிலையில் தற்போது இந்த சரிவு சக்தி காந்ததாஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நாளை நடைபெற இருக்கும் நிதி கொள்கை குழு கூட்டத்தில் ரெபோ ரேட்டில் மாற்றம் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் பணவீக்கம் 6.21 என்ற 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. உணவுப்பொருட்கள் விலையேற்றம் இந்த பணவீக்கத்துக்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதம் வரை ரெபோ வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் அதே நேரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் ரிசர்வ் வங்கியிடம் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில் சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் வரும் 10 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அடுத்த ரிசர்வ் வங்கி ஆளுநர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.