வாரத்துக்கு 3 நாட்கள் ஆஃபீஸ் வாங்க..
பிரபல டெக் நிறுவனமான விப்ரோ தனது பணியாளர்களை வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சவுரப் கோவில் பேசியுள்ளார். அதில், ஓராண்டுக்கு இத்தனை நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்ற வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். கடந்தாண்டு நவம்பர் 15 ஆம் தேதி முதல் விப்ரோ ஹைப்ரிட் வேலை செய்யும் முறையை அமல்படுத்தியுள்ளது. வாரத்தில் 3 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வரவேண்டும் என்று அறிவித்தது. இதில் சில மாறுதல்கள் தற்போது செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே டிசிஎஸ் வாரத்தில் 5 நாட்கள் அலுவலகத்துக்கு வரவும், இன்போசிஸ் மாதத்தில் 10 நாட்கள் அலுவலகத்துக்கு வரவும் ஊழியர்களுக்கு ஆணையிட்டுள்ளனர். காக்னிசன்ட், எச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் வாரத்தில் 5 நாட்கள் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளனர். தங்கள் நிறுவனம் ஏன் ஹைப்ரிட் மாடலை தேர்ந்தெடுத்ததாக கூறும் சவுரப், இணைந்து பணியாற்றுதல், வசதிக்கு தகுந்தபடி வளைந்து பணியாற்றுதல், நம்பிக்கை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளும் உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஊழியர்கள் மத்தியில் பணி சூழல் மற்றும் பந்தத்தை அதிகரிக்க மீண்டும் கொரோனாவுக்கு முன்பு இருந்தது போலவே மக்கள் அலுவலகத்துக்கு திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.