அப்பூ…. ஆமாம்பூ… 25 லட்சம் கோடிப்பூ….
பொதுத்திட்டங்களில் ஊழலை ஒழிக்கும் வகையில் மக்களின் ஜன்தன் வங்கிக்கணக்குகளில் 25 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை டெபாசிட் செய்துள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். 75டிஜிட்டல் வங்கி அலகை பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில் நாட்டில் 50 கோடியில் சரிபாதி பெண்களுக்கான கணக்குதான் உள்ளதாக ஐதராபாத்தில் கிஷன் ரெட்டி தெரிவித்தார்
ஜன்தன் கணக்குகளில் இதுவரை 25லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலுத்தியுள்ளது மிகப்பெரிய சாதனை என்றார்.போலியான அடையாளங்களை காட்டி பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த மோசடி மற்றும் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தற்போது தவிர்க்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர்,நேரடி வங்கிப்பரிவர்த்தனைகள் மூலம் 4 கோடி போலி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
100 ரூபாயை ஏழை எளிய மக்களுக்கு சென்று சேர்ப்பதற்குள் 85 ரூபாயை நடுவில் இருக்கும் தரகர்கள் சாப்பிடுவதாக முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது 100 ரூபாயில் ஒரு பைசா கூட வேறு திசைக்கு செல்லாமல் பொதுமக்களுக்கு நேரடியாக சென்று சேர்வதாக பெருமையுடன் தெரிவித்தார்
பட்டியலின மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகையை செலுத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக கூறிய கிஷன் ரெட்டி, மாணவர்களின் பட்டியலை தெலங்கானா அரசு அளித்தால் 300 கோடி ரூபாய் ஊக்கத் தொகையை மத்திய அரசு அளிக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.