146% உயர்வு..என்னவா இருக்கும்??nothing தான்..
நத்திங் கடந்த ஆறு காலாண்டுகளாக இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுத்துள்ளது. நத்திங் விற்பனை 2025 இன் இரண்டாம் காலாண்டில், ஆண்டுக்கு ஆண்டு அளவில் 146 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2013 இல் ஒன் பிளஸை இணைந்து நிறுவிய 36 வயதான சீன-ஸ்வீடிஷ் தொழில்முனைவோர் கார்ல் பெய், பின்னர் 2020 இல் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட நத்திங் நிறுவனத்தைத் தொடங்கினார்.
புதுமையான வடிவமைப்பு மற்றும் தயாரிப்புகளுக்கு பெயர் பெற்ற நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனையில், நான்கில் மூன்று பங்கை இந்தியா கொண்டுள்ளது. உலக அளவில் கடும் போட்டிகளை கொண்ட, சிக்கலான ஆனால் பெரிய அளவில் வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் சந்தைகயாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்பு, டெல்லியை தளமாகக் கொண்ட ஆப்டிமஸுடன், 10 கோடி டாலர் மதிப்பிலான கூட்டு முயற்சி திட்டத்தில் நத்திங் கையெழுத்திட்டது. இதன் அடிப்படையில் ஆப்டிமஸ், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைக்காக நத்திங் போன்களை இந்தியாவில் தயாரிக்கும். நத்திங்கின் மலிவு விலை போன் பிராண்டான CMF, இனி இந்தியாவில் ஒரு சுயாதீன துணை நிறுவனமாக செயல்படும் என்றும், ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் உற்பத்தியில் இங்கு ஈடுபடும் என்று நத்திங் அறிவித்துள்ளது.
நத்திங் நிறுவனம் சமீபத்திய முன்னெடுத்த $20 கோடி டாலர் நிதி திரட்டலில் ஜெரோதா நிறுவனர் காமத் 2.1 கோடி டாலர் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 130 கோடி டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
குவால்காம் வென்ச்சர்ஸ் மற்றும் ஆல்பாபெட் (கூகிள்) நிறுவனங்களின் ஆதரவும் இந்த நிறுவனத்திற்கு உள்ளது. ஆனால், இந்திய சந்தையில் தாமதமாக நுழைந்துள்ள நத்திங், Z தலைமுறை நுகர்வோர் மத்தியில் அதற்கு உள்ள ஈர்ப்பை பயன்படுத்தி, இந்தியாவின் டாப் 10 பட்டியலில் நுழைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் 60 சதவீதத்தை விவோ, சாம்சங், ஒப்போ மற்றும் ரியல்மி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது
