கூகுளுக்கே இந்த நிலையா?…
உலகம் முழுவதும் அறியப்பட்ட பெரிய நிறுவனம் கூகுள், இந்த நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் வரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் உலகின் பல நாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமாக ஆல்ப்பெட் நிறுவனம் உள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார். அந்நிறுவனத்தின் வளர்ச்சி இவரின் தலைமையின் கீழ் அசுரவேகத்தில் உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை பங்கேற்றார். அப்போது கூகுள் நிறுவனத்தின் செயல்திட்டங்கள் குறித்து விளக்கினார். கூகுள் நிறுவனத்தின் விளம்பரங்களின் வருவாய் வெகுவாக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி பேசிய அவர், உலகளவில் பொருளாதார மந்தநிலை மற்றும் நிலையற்ற தன்மை நிலவுவதாக கூறினார்.
மக்கள் அதிகம் விளம்பரங்களை பார்க்காமல் தவிர்ப்பதற்கும், உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கும் தொடர்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களில் சிலரை ஆட்குறைப்பு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சூசகமாக தெரிவித்தார். இருக்கும் ஊழியர்களை கொண்டு, 20 விழுக்காடு கூடுதல் செயல்திறனை வெளிப்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.
சில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் சீன செயலியான டிக் டாக் அதிகம் வளர்ந்து வரும் சூழலில் கூகுள் நிறுவனம் அண்மையில் கடும் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
ஆட்குறைப்பு தொடர்பாக கடந்த ஜூலை மாதத்திலேயே சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதில் வருவாய் வெகுவாக குறைந்து வரும் சூழலில் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜூலையில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி பேசியிருப்பது அந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் அண்மையில்தான் தனது ஸ்மார்ட் வாட்ச் திட்டத்தை விரிவு படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தில் புதிதாக சில ஆயிரம் பேர் உலகம் முழுவதும் புதிதாக சேர்க்கப்பட்ட நிலையில், சுந்தர் பிச்சையின் அறிவிப்பு உலகளவில் பேசுபொருளாகியுள்ளது..