டிவிட்டரில் அடுத்த ரவுண்டு உருட்டு
பெரும் தொழிலதிபரும், பெரிய பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், எத்தனை பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை அமைத்தாரோ அத்தனை பெரிய வேகத்தில் அடுத்தடுத்த பிரச்சனையில் சிக்கிக்கொண்டு வருகிறார். 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், அங்கு பணியில் இருந்த இந்தியர்களில் 90% பொறியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளார். இது மட்டுமின்றி 4ஆயரத்து 400 ஒப்பந்த பணியாளர்களையும் மஸ்க் பணி நீக்கம் செய்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். சர்வாதிகாரி போல செயல்பட்ட மஸ்க், தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை ஒரு நொடி கூட யோசிக்காமல் டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். பல மணி நேர வேலை, இலவச சலுகைகள் ரத்து என அடுத்தடுத்த சிக்கன நடவடிக்கைகளை மஸ்க் செய்து வந்தாலும் தாக்குப்பிடித்து சில பொறியாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது அவர்களுக்கு புதிய மின்னஞ்சலை மஸ்க் அனுப்பியுள்ளார். தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற புதிய படிவம் ஒன்றை பூர்த்தி செய்ய நிர்பந்திக்கும் மஸ்க் விருப்பம் இல்லாதவர்கள் 3 மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு பணியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். இந்த புதிய முறை பழைய பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்களில் பலர் கூண்டோடு பதவி விலகுவதாக அறிவித்துள்ளதால் டிவிட்டரின் பல கிளை அலுவலகங்கள் மூடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடன் பிரச்சனை, தற்போது பொறியாளர்கள் கூண்டோடு பதவி விலகுவதால் டிவிட்டர் நிறுவனம் தனது சேவையை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.