2025-26-ல் ஏற்றுமதி ஆகிறது வந்தே பாரத் ரயில்கள்…
மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலை அண்மையில் ரயில்வே அறிமுகப்படுத்தியது
இது ரயில் பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ரயில்வேவுக்கு வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் 2025-26ம் ஆண்டில் ஐரோப்பா,தென் அமெரிக்காவுக்கு வந்தே பாரத் ரயில்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. 2024ம் ஆண்டுக்குள் இந்த வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதியும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
அடுத்த சில ஆண்டுகளில் 10 முதல் 12 லட்சம் கிலோமீட்டர் ரயில் பாதையை 75 வந்தே பாரத் ரயில்கள் மூலம் கடக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்குள் 475 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணி முடிந்ததும்,வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விமானத்தில் ஏற்படும் சப்தத்தை விட 100 மடங்கு குறைவான சப்தத்தை இந்த ரயில்கள் ஏற்படுத்துவதால் உலகளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் இந்த ரயில்கள் 220 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க பணிகள் நடப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள ராஜ்தானி,துரந்தோ ரயில்களுக்கு மாற்றாக வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.