ஒரே வாரத்திற்குள் 3 பிரிவுகளை மூடியது அமேசான் நிறுவனம்!!!!
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு என விளம்பரங்களில் கேட்பதைப்போல பெரிய நிறுவனங்களுக்கு என்ன ஆனது என கேட்க வைக்கும் அளவுக்கு உலக பொருளாதார சூழல் உள்ளது. அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களான கூகுள் மெட்டா,டிவிட்டர்,ஹெச்பி உள்ளிட்ட நிறுவனங்கள் வரிசையாக தங்கள் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த வரிசையில் அமேசான் 10 ஆயிரம் பேரை நீக்க உள்ளதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தனர். இந்த சூழலில் அமேசானில் உள்ள உணவுப்பொருட்கள் டெலிவரி மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த அமேசான் அகாடமி ஆகிய இரு பிரிவுகளையும் அமேசான் மூடிவிட்டது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அமேசான் பிஸ்னஸ் டிஸ்ரிபியூசன் என்ற பிரிவையும் நேற்று மூடியது.
இந்த பிரிவு, மளிகைக் கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்து வந்தது. அதாவது, கர்நாடகத்தின் பெங்களூரு,மைசூரு மற்றும் ஹுப்பாளி ஆகிய பகுதிகளில் இந்த பிரிவு இயங்கி வந்தது. ஆண்டுதோறும் ஆராயப்படும் நிலை அறிக்கையின் அடிப்படையில் தான் இந்த மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமேசான் தரப்பு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட விநியோகப் பிரிவு மட்டுமே ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ள அமேசான், அமேசான் இணையத்தில் கிடைக்கும் மற்ற துறை சார்ந்த பொருட்கள் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவித்துள்ளது தற்போது வழங்கப்பட்டு வரும் பிற சேவைகளில் பாதிப்பு இருக்காது என்று அந்த நிறுவனம் தெரிவித்திருந்தாலும் வரும் ஆண்டுகள் கடினமாக இருக்கும் என்று அந்த நிறுவன பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். ஏனெனில் 3 பிரிவுகளையே 3 நாட்களில்தூக்கி வீசிய அமேசான் தங்கள் வாழ்வாதாரத்தை எப்படி காக்கும் என்றும் பணியாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். அண்மையில் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது. தொடர்பாக அமேசான் நிறுவனத்துக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்து
இருந்தது குறிப்பிடத்தக்கது.