ஹிண்டன்பர்க் பற்றி மனம் திறந்தார் அதானி..
அதானி குழுமம் என்ற வியாபார சாம்ராஜ்ஜியத்தை சிறுக சிறுக கட்டி வந்தார் கவுதம் அதானி, அதனை ஹிண்டன்பர்க் என்ற ஒற்றை விவகாரத்தை வைத்து சாம்ராஜ்ஜியமே ஆட்டம் கண்டது. இந்த நிலையில் தனது பங்குதாரர்களுக்கு கவுதம் அதானி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் சிலர் வேண்டுமென்றே தங்கள் மீது பழி சுமத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜனவர் 24 ஆம் தேதி இந்த விவகாரத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் பழைய இடத்தை கவுதம் அதானியால் பிடிக்க முடியவில்லை. 19 லட்சம் கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த அவரின் சொத்து மதிப்பில் பாதியை ஹிண்டன்பர்க் அறிக்கை காலி செய்தது என்றே கூறவேண்டும். இந்த நிலையில் தம்மைப்பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக கூறியுள்ள அதானி,உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் விதிமீறலுக்கான ஒரு காரணமும் வலுவாக இல்லை என்று மேலோட்டமாக கூறப்பட்டதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு பக்கம் அவர் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற முயற்சித்து வரும் நிலையில் அதானி குழுமத்தின் முதன்மை நிதி அதிகாரியான ஜுகேஷிந்தர் சிங் என்பவர், அதானி குழுமத்திற்குள் நிதி அதிகரிக்கத் தேவையான அனைத்து பணிகளையும் செய்து வருகிறார். இந்தியாவில் இது குறித்து விரிவான விசாரணை நடந்து வரும் நிலையில், அமெரிக்காவிலும் முதலீட்டாளர்களை நம்ப வைக்க அதானி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். எனினும் அமெரிக்காவிலும் விதிமீறில் நடந்தா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியும் தனது விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது. அந்த அமைப்பு கவுதம் அதானி பற்றி அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த நிலையில் முதலீட்டாளர்களை கவர கவுதம் அதானி பல்வேறு அம்சங்களை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.