சிமென்ட் கம்பெனியை வாங்கிய அதானி..
பிரபல தொழிலதிபரான கவுதம் அதானி, அண்மையில் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தை வாங்கியிருந்தார். இவர் அடுத்தகட்டமாக சங்கி இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை வாங்கியுள்ளார். 5,000 கோடி ரூபாய்க்கு இந்த டீல் முடிந்துள்ளது. 2028ஆம் ஆண்டு சிமென்ட் துறையில் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் முயற்சியாக இந்த கையகப்படுத்தும் முயற்சி நடந்துள்ளது.கிளின்கர் எனப்படும் சாம்பல் துகல்களை உற்பத்தி செய்வதில் சங்கி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பிரபலமானதாகும். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை X பக்கத்தில் கவுதம் அதானி அறிவித்துள்ளார். சங்கி இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் ஆண்டுக்கு 66 லட்சம் டன் கிளின்கர் உற்பத்திக்கு பெயர்பெற்றதாகும்.6.1மில்லியன் டன் சிமென்ட் மற்றும் 1 பில்லியன் டன் சுண்ணாம்புக்கல் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். சங்கிபுரம் என்ற பகுதிதான் இந்தியாவின் பெரிய சிமென்ட் மற்றும் கிளின்கர் உற்பத்தியாளராகும். சங்கி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி 7 கோடியே 36 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2028ஆம் ஆண்டுக்குள் 14 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்ய அதானி குழுமம் இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த 2 ஆண்டுகளில் 15 மெட்ரிக்டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் என்று நம்புவதாக அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.