2,000 ரூபா நோட்டு யார்கிட்ட இருக்கு தெரியுமா…??
இந்தியாவில் அண்மையில் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதுடன், வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வங்கிகளிடம் நடத்திய கணக்குகளின்படி, 2,000ரூபாய் நோட்டுகள் அதிகம் மக்களிடம் இருந்து பெறப்படவில்லை என்பதும், பெரும்பாலும் அவை பெருநிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.ஆகஸ்ட் 1ஆம் தேதி தரவுகளின்படி 2,000 ரூபாய் நோட்டுகள் 3லட்சத்து 14 ஆயிரம் கோடி ருபாய் அளவுக்கு வங்கிகளுக்கு திரும்பியுள்ளன. இது மொத்த அளவில் 88% ஆகும். கடந்த மே 19ஆம்தேதி 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மட்டும் 3589 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன. இதேபோல் யூகோ வங்கியிலும் 3471 கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. சிட்டி யூனியன் வங்கியிலும் 380கோடி ரூபாய் அளவுக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. தனிப்பட்ட நபர்களிடம் இருப்பதைவிட, நிறுவனங்களிடம்தான் அதிக 2,000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும் அதனால்தான் அதிக டெபாசிட்களாக மாறுவதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெறும் 0.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே 2,000ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.
பெறப்பட்ட நோட்டுகளில் டெபாசிட்களில் 87 % , மற்றும் 13% சில்லறை மாற்றியதாகவும் ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 30ஆம்தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக ஆகிவிடும். கடந்த 2016ஆம் ஆண்டு, 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட பிறகு பணப்புழக்கத்தை அதிகரிக்க வைக்க 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகளிடம் போதிய பணம் இருப்பு இருப்பதை உறுதி செய்ய ICRRஎன்ற விகிதம் ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.