லாட்டரி விழுந்த கவுண்டமணியைப் போல துடிக்கும் டாபர்…
இந்தியாவிலேயே ஆலமரம் போல வளர்ந்து நிற்கும் நிறுவனங்களில் ஒன்று என்று சொன்னால் அதில் டாபரும் ஒன்று. இந்த நிறுவனத்திடம் தற்போது 7 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கைவசம் இருக்கிறது. சுகாதாரத்துறை,தனிநபர் பயன்படுத்தும்பொருட்கள் துறையில் எதையாவது ஒரு நிறுவனத்தை வாங்க டாபர் நிறுவனம் ஆர்வமாக இருக்கிறது. அந்த நிறுவனத்தின் சிஇஓ மோஹித் மல்ஹோத்ரா இது பற்றி பேசியிருக்கிறார். அதில்,நேரடியாக இல்லாமல் ஆன்லைன் வணிக நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார். தற்போது கைவசம் இருக்கும் பிராண்டுகளை மக்களிடம் நேரடியாக சென்று சேர்க்கும் வகையில் இந்த புதிய பிஸ்னஸை மாற்ற அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. சரும பராமரிப்பு சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டாபர் நிறுவனம் புதுப்புது பொருட்களை அறிமுகப்படுத்துவதை விட மக்களிடம் அதிகம் சென்று சேரும் துறைகளில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு பிராண்ட் வளர வேண்டுமெனில் ஒவ்வொரு இரண்டு அல்லது 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதிய அவதாரம் எடுக்க வேண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டாபர் நிறுவனம் தனது பரினாம வளர்ச்சியை பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.டாபர் வசம் தற்போது 9 முக்கியமான பிராண்டுகள் உள்ளன.அதில் 8 பிராண்டுகள் இந்தியாவிலேயே பிரபலமானவை, ஒன்று மட்டும் வெளிநாட்டில் உள்ளது. ரியல் என்ற ஜூஸ் நிறுவனம் தற்போது வருமானமாக 1,700 கோடி ரூபாய் தருவதாகவும், இதனை 2,000 கோடியில் இருந்து 2,500கோடி ரூபாயாக உயர்த்தவும் திட்டமிட்டு இருப்பதாக டாபர் நிறுவனம் தெரிவிக்கிறது.டாபர் ஆம்லா, டாபர் ரெட் மற்றும் வாட்டிகா ஆகிய 3 பிராண்டுகள் ஆயிரம் கோடி ரூபாய் பிராண்டுகளாகும்.இவற்றை ஆயிரத்து 500கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மல்ஹோத்ரா தெரிவித்திருக்கிறார். அண்மையில் தான் பாட்ஷா மசாலா நிறுவனத்தின் 51%பங்கை டாபர் வாங்கியிருந்தது.