இது பழைய ஜாம்பவான்களின் 2 ஆவது இன்னிங்க்ஸ்..
இந்தியாவில் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் ஓய்வு வயது 59 அல்லது 60 ஆக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மக்களின் சராசரி வாழும் காலம் அதிகரித்துள்ளதால் 60 வயதுக்கு பிறகும் வாழ்க்கையை ஓட்ட ஏதோ ஒரு தேவை இருக்கிறது. அது பணமாக இருக்கலாம்,இல்லை எப்போதும் தங்களை ஆக்டிவாக வைத்துக்கொள்வதாக இருக்கலாம். இதற்கான நல்ல வாய்ப்புகளை தற்போது தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றன. 60 வயது வரை பெற்ற அனுபவங்களை புதிதாக தொடங்கும் நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு பகுதி நேர வேலையாக பார்க்கும் வகையில் பிரத்யேக பணிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. விஸ்டம் சர்க்கிள் என்ற நிறுவனம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை ஆலோசகர்களாக பணிக்கு எடுக்கும் முயற்சியை எடுத்துள்ளது. ஒரு மணி நேரத்துக்கு அவர்களுக்கு சம்பளமாக 3 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை கூட அளிக்கப்படுகிறது. இப்படி பணி செய்வது தங்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிப்பதுடன், சில மூத்த குடிமக்கள் இந்த வயதிலும் சேல்ஸ் பிரிவில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இது குறித்து விழிப்புணர்வு இன்னும் அதிகளவில் தேவைப்படுகிறது.அண்மையில் பெயின் அண்ட் கம்பெனி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 2030ஆம் ஆண்டுக்குள் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் 15 கோடி வேலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது இன்னிங்க்சை சிறப்பாக விளையாட விரும்புவோருக்கு வாய்ப்பளிக்க பல நிறுவனங்களும் சிவப்பு கம்பளம் விரித்து காத்திருக்கின்றன. புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்கி முட்டி மோதுவதை விட, பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களின் வழிகாட்டுதல்கள் , நிதி இழப்பு அபாயத்தை தடுக்கும் என்பதால் பல நிறுவனங்களும் தங்கள் ஆலோசகர்களாக மூத்த குடிமக்கள் மற்றும் முன்னாள் ஓய்வுபெற்ற பணியாளர்களை திரும்ப அழைக்கின்றனர். இது ஒரு நல்ல முயற்சி என்றே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.