வருகிறது பட்ஜெட் வந்தே பாரத் ரயில்கள்..?
இந்திய ரயில்வே பல்வேறு காலகட்டங்களில் பணத்தை மிச்சப்படுத்தும் முயற்சியையும் , லாபத்தை பதிவு செய்வதிலும் குறியாக இருந்து வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவம் தரும் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 6 புதிய வந்தே பாரத் ரயில்களை இயக்கவும், அது வெற்றிபெறும்பட்சத்தில் விரிவுபடுத்தவும் ரயில்வே முடிவெடுத்திருக்கிறது. மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளையும் இந்த ரயில்களில் பெறமுடியும் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள். வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் அதே நேரம் செலவினங்களை குறைக்கவும் மத்திய அரசும் ரயில்வேயும் குறிவைக்கின்றனர். புதிய வந்தே பாரத் ரயில்களில் ரயில்களுக்குள்ளேயே விளம்பரம் செய்யவும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. பொழுதுபோக்கு அம்சங்களையும் ரயில்களுக்குள்ளேயே தரவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. புதிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஹவுஸ்கீப்பிங்கை இலவசமாக செய்யவேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இந்த சேவைகளை தரும் நிறுவனங்கள் 120 கோடி ரூபாய் வருவாய் கொண்டதாகவும், 900 ஊழியர்களை கொண்டதாகவும் இருத்தல் வேண்டுமாம். சதாப்தி,ராஜ்தானி, தேஜஸ்,வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களில் சேவைகள் அளிக்கும் நிறுவனங்களைப்போல அனைத்து வகையான குறிப்பாக ஹவுஸ் கீப்பிங், சுற்றுலா, கேட்டரிங் உள்ளிட்ட சேவைகளை குறிப்பிட்ட நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் ரயில்வே எதிர்பார்க்கிறது.