“இவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம்”
இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி என்பது அசுர வளர்ச்சி அடைந்து வரும் துறையாக இருக்கிறது. இந்த துறையில் பணியில் சேர உள்ள பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத பொருட்களை உருவாக்கும் முயற்சியில் பல முன்னணி நிறுவனங்களும் குதித்துள்ள நிலை திறமையான பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கரீர் நெட் மற்றும் டெலாட்டி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உள்நாட்டிலேயே தயாராகும் மின்சார வாகனங்கள், அதற்கான உபகரணங்கள் தயாரிப்போர், கிரீன் செல் உள்ளிட்ட நிறுவனங்களில் தேவை என்பது 200%ஆக இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் போன்ற பிரபல நிறுவனங்களும் மின்சார வாகன உற்பத்திக்கு திறமையான, இளம் பணியாளர்களை தேடி வருகின்றனர். கல்லூரி முடித்ததும் உள்ள இளைஞர்களை ஆக்கப்பூர்வமாக மாற்றும் முயற்சியாக சில பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. 2023-ல் மட்டும் இந்த துறையில் 6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில் இருமடங்காகும்.2024-ல் இது மேலும் 120-130%வரை உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆட்டோமொபைல் பணிகளில் ஈடுபடும் நபர்களின் சம்பளத்தை விட 37%கூடுதலாக மின்சார வாகன உற்பத்தி பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுகிறது.
இவை தவிர்த்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு, உற்பத்தி துறைகளில் பி.டெக் மற்றும் எம்டெக் படித்த தொழிலாளர்களுக்கும் 12-15 விழுக்காடு வேலைவாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.