பாதியாக சரிந்த டிஸ்னி பங்கு மதிப்பு..
தொடர் நஷ்டங்களை சந்தித்து வரும் டிஸ்னி நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது கிளையை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியுடன் இணைக்க முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில் வால்ட் டிஸ்னி இந்தியா நிறுவன பங்குகளின் மதிப்பு பாதியாக சரிந்துள்ளது. 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வணிகம் 4.5 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டதாகவே திகழ்கிறது. ஏற்கனவே ஜி நிறுவனத்துடன் மோதல் போக்கு காரணமாகவும், ஜீ நிறுவன நிதி சிக்கலால் டிஸ்னி தனது பணிகளில் தொய்வு ஏற்படுத்திக்கொண்டதும் டிஸ்னியின் மதிப்பை குறைத்திருக்கிறது. ரிலையன்ஸ் உடன் இணைந்துள்ள கூட்டு நிறுவனத்தில் டிஸ்னியின் பங்கு 40 விழுக்காடாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 51 விழுக்காடு பங்குகள் இருக்கும், மீதமுள்ளவை ஜேம்ஸ் முர்டாக்குக்கு சொந்தமான லுபா சிஸ்டம்ஸ் நிறுவனத்திடம் இருக்கும்.
28 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட ஊடக சந்தை மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இந்த இணைப்பு மிகமுக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜீ நிறுவனத்துக்கும் -சோனி நிறுவனத்துக்குமான டீல் பாதியில் நின்றுவிட்டதால் ரிலையன்ஸ் குழுமத்துக்கு தற்போது போட்டியாளரே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 2022-ல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பிய ஜியோ, மற்ற போட்டியாளர்களை வாயடைக்கச் செய்து லாபத்தையும் சம்பாதித்ததுடன், அதிகப்படியான பார்வையாளர்களையும் பெற்றது. இதே உத்தியை பயன்படுத்தி கிரிக்கெட் உலகக்கோப்பையை டிஸ்னி நிறுவனம் ஒளிபரப்பி இழந்த வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்த்துக்கொண்டனர். இந்நிலையில் டிஸ்னியும்-ரிலையன்ஸும் இணைந்தால் போட்டிக்கு யாருமே இல்லை என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது.