இறக்குமதி வரி 10%குறைப்பு..
செல்போன் உற்பத்திக்கு தேவைப்படும் உபகரணங்கள் இறக்குமதி வரியை 15 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாக மத்திய அரசு ஜனவரி 30 ஆம் தேதி குறைத்தது. இந்த வரிக்குறைப்பால் பேட்டரிகவர், முன்பக்க கவர்,நடுப்பக்க கவர் மற்றும் பிரதான லென்ஸ், பேக் கவர் மற்றும் ஜிஎஸ்எம் ஆண்டினா உள்ளிட்டவையின் வரி குறையும். சிம் சாக்கெட், ஸ்க்ரூ மற்றும் பிளாஸ்டிக் உபகரணங்களின் மீதான வரியும் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரியை குறைக்க வேண்டாம் என்று GTRIஎன்ற அமைப்பு அரசை கேட்டுக்கொண்டது. ஆனால் அவர்கள் கோரிக்கையை அரசு நிராகரித்ததுடன் வரியை குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ICEAஎன்ற அமைப்பின் கோரிக்கையை ஏற்று வரியை குறைத்திருப்பதாக கூறப்படுகிறது. வரி குறைந்திருப்பதால் உற்பத்தி 28 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்றும் அதன் மதிப்பு 82 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் சந்தை ஏற்றுமதி கடந்த 2022-ல் 7.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் கடந்தாண்டு 13.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகவும், அதற்காக உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக இந்தியாவில் தயாரான செல்போன்கள் இந்தியாவிற்குள்ளேயே 98 விழுக்காடு விற்கப்படுவதாக GTRI தெரிவிக்கிறது. இந்தியாவில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை மூலம் நிறுவனங்களுக்கு 4 முதல் 6 விழுக்காடு லாபம் கிடைக்கும். ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் தரும் பாக்ஸ்கான், விஸ்ட்ரான் ஆகியவை சிறப்பு பொருளாதார மண்டலங்களால் பயன்பெற்றுள்ளன. ஆனால் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை முடிந்ததும் நிறுவனங்கள் ஓட்டம்பிடித்துவிடும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பல்வேறு சலுகைகள் கிடைத்ததும் உற்பத்தியை அதிகப்படுத்திய நிறுவனங்கள் அந்த ஆண்டில் ஜிஎஸ்டி அறிமுகமானதும் காணாமல் போய்விட்டதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.