தடையை நீட்டித்த கனடா அரசு..
வெளிநாட்டு மக்கள் கனடாவில் வீடு வாங்க தற்போது கனடாவில் உள்ள தடையை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கனடாவிலேயே இருக்கும் உள்ளூர் மக்களுக்கு போதுமான தங்குமிடம் இல்லை என்றும், கனடாவிற்கு படிக்க வரும் மக்கள் அங்கேயே வீடுகள் வாங்குவதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. கனடாவின் குடிமக்களுக்கு குறைந்த விலையில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர தங்கள் தரப்பு தயாராக இருப்பதாக அந்நாட்டு துணை பிரதமர் அண்மையில் அறிவித்தார். ஏற்கனவே வெளிநாட்டு மக்கள் கனடாவில் வீடு வாங்க வரும் 2025 ஆம் ஆண்டு வரை தடை உள்ள நிலையில் இது மேலும் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டு 2027 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. படிப்பதற்காக வந்துவிட்டு, அங்கேயே வேலை தேடி அங்கேயே வீடுகளை அதிகம் வாங்கும் வெளிநாட்டு மாணவர்களால் ஏற்படும் சிக்கல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு தரவுகளின்படி மொத்தம் 3லட்சதது60 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே புதிய மாணவர் உரிமம் கிடைக்கும் வகையில் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டுகளைவிட 35 விழுக்காடு குறைவாகும். புதிய கட்டுப்பாடுகளால் ஏற்கனவே மாணவர் விசா பெற்ற மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே தூதரக உறவில் விரிசல் உள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் அங்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.