கிசான் திட்ட நிதியை உயர்த்தும் திட்டம் நஹி..
விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கிசான் திட்ட நிதியை 6 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கிறது. விவசாயத்துறையில் மகளிர் பங்களிப்பை அதிகரிக்க இந்த நிதி உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு விவசாயத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா இவ்வாறு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார். 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.எம்.கிசான் திட்டத்தின்படி ஆண்டுக்கு 3 முறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 15 தவணைகளில் 11 கோடி விவசாயிகளுக்கு 2.81 லட்சம் கோடி ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வங்கிக்கணக்குகளில் நேரடியாக பணம் வரவு வைக்கும் திட்டமானது உலகிலேயே மிகப்பெரிய திட்டம் என்று அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். இடைத்தரகர்கள் இல்லாமல் வங்கிக்கணக்குகளில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் மட்டும் 2 கோடியே 62லட்சம் விவசாயிகளுக்கு கிசான் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த விவசாயிகளை இந்த திட்டத்தில் சேர்க்கவேண்டியது மாநில அரசாங்கங்களின் பொறுப்பாக உள்ளது.