அச்சு ஊடகத்துக்கு குறையாத மவுசு..
கொரோனா காலகட்டத்தில் பெரிதும் அடிவாங்கிய துறைகளில் ஒன்றாக அச்சு ஊடகங்கள் உள்ளன. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளன. கொரோனா காலகட்டத்துக்கு முன்பு இருந்த அளவுக்கு வளர்ச்சியை அச்சு ஊடகத்துறை பெற்று வருகிறதாம். பிட்ச் மாடிசன் விளம்பர அறிக்கை 2024 அறிக்கைப்படி, அச்சு ஊடக வருவாய் 7 விழுக்காடு உயர்ந்துள்ளதாம். அதாவது 20,613 கோடி ரூபாய் அளவுக்கு இந்தாண்டு வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வருவாய் அளவு என்பது 2019 ஆம் ஆண்டில் இருந்ததை விடவும் அதிகமாகும். விளம்பர வருவாய் 1.11 லட்சம் கோடி ரூபாய் அளவாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டில் 16,595 கோடி ரூபாயாக இருந்த வருவாய் 2022-ல் 18,470 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்தாண்டு 19,250 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. செய்திகளை அச்சிடும் செலவுகள்தான் அதிகமாக உள்ளனவாம். அதாவது கொரோனா காலகட்டத்தில் அச்சிடும் செலவு ஒரு மெட்ரிக் டன்னுக்கு இருந்த நிலையில் தற்போது 50 ஆயிரம் ரூபாயாக குறைந்திருக்கிறதாம். உலகளவில் அச்சு ஊடக வளர்ச்சி குறைவாக இருக்கும் நிலையில் இந்தியாவில் இந்த வருவாய் உயர்ந்திருக்கிறதாம்.அதாவது உலகளவில் இந்த விகிதம் 4 விழுக்காடாக இருக்கும் அதே நேரத்தில் தற்போது இந்தியாவில் இந்த விகிதம் 20 விழுக்காடாக இருக்கிறது.சீனாவில் இந்த விகிதம் 0 ஆக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் 5 விழுக்காடுக்கு குறைவாகவே இந்த அளவு இருக்கிறதாம்.
இந்தியாவில் வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதும், பத்திரிகைகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளதும் வருவாய்க்கு வழி வகுக்கிறது. சரியான நேரத்தில் பத்திரிகைகள் வீடுகளுக்கு சென்று சேர்வதும், இந்தாண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்து வருவதும் வருவாய் அதிகரிக்க முக்கிய காரணியாக இருக்கிறது. டஜிட்டல் பிரிவுகளில் நம்பகத்தன்மை குறைந்து வருவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிராண்டுகள் மீது நம்பிக்கை ஏற்படுத்தவும் நாளிதழ்கள் உதவி செய்கின்றன. என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.