குறைந்து வரும் இடைவெளி..
ஒரு காலகட்டத்தில் நகரங்களில் மட்டுமே காணப்பட்ட ஆன்லைன் வணிகம் தற்போது, 2,3 ஆம் தர நகரங்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக அண்மையில் வெளியான தரவுகள் இருக்கின்றன. அதாவது நகரம் மற்றும் கிராமங்களில் வீடுகளில் மக்கள் வாங்கும் பொருட்களின் அளவு கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறதாம். குறிப்பாக உணவு இல்லாமல் மற்ற பொருட்களைவாங்கும் கிராம,நகர மக்களின் இடைவெளி வெகுவாக குறைந்திருக்கிறதாம். கன்சம்ப்சன் எக்ஸ்பெண்டிச்சர் சர்வே என்ற HCESநிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. வீடுகளுக்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கும் அளவு என்பது கிராமங்களில் 2.6 மடங்கும், நகரங்களில் 2.5 மடங்கும் அதிகரித்து உள்ளதாம்..
கிராமங்களில் மக்களில் ஒரு தனிநபர் செலவு செய்யும் தொகை 3773 ரூபாயாகவும், நகரங்களில் இதே தொகை 6,459 ரூபாயாகவும் இருக்கிறது. 2004-05 காலகட்டத்தில் நகரங்களில் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட கிராமத்தைவிட இரண்டு மடங்காக இருந்தது. 2022-23 காலகட்டத்தில் இந்த இடைவெளி 1.71 மடங்காக குறைந்தது. இதுவே கடந்த 2011-12 காலகட்டத்தில் 1.8 மடங்காக இருந்துள்ளது. கிராமங்களில் மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் பணத்தில் 46 விழுக்காடு அளவுக்கு உணவுக்காக செலவிடுகின்றனர். ஆனால் 2022-23 காலகட்டத்தில் நகரங்களில் மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் பணத்தில் 39 விழுக்காடு அளவுக்கு உணவுக்கு செலவு செய்வதாக தெரியவந்துள்ளது. 2011-12 காலகட்டத்தில் கிராமங்களில் 53 விழுக்காடு அளவுக்கு உணவுக்கும், நகரங்களில் 42.6 விழுக்காடு அளவுக்கு உணவுக்கும் பணம் செலவு செய்யப்பட்டது. நாட்டின் பணவீக்கம் என்பதில் உணவு மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. சில சமூக நல திட்டங்களான இலவச ரேஷன்,லேப்டாப், மொபைல், பைக், பள்ளி சீருடைகள்,காலணிகள் உள்ளிட்டவை வழங்கப்படுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக சிக்கீமைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் பணம் செலவு செய்வது தெரியவந்திருக்கிறது. அந்த மாநிலத்தில் கிராமத்தில் வசிப்போர் 7731 ரூபாயும், நகரத்தில் வசிப்போர் 12,105 ரூபாயும் சராசரியாக பொருட்கள் வாங்க செலவு செய்கின்றனராம். இதற்கு நேர் எதிராக சத்தீஸ்கரில் உள்ள கிராம மக்கள் நாட்டிலேயே குறைவாக அதாவது 2466 ரூபாயும், அதிகபட்சமாக நகரத்தில் இருப்பவர்கள் சராசரியாக 4483 ரூபாயும் செலவு செய்கின்றனராம். இந்தாண்டின் இரண்டாவது பிற்பகுதியில் புதியதாக ஒரு புள்ளிவிவரமும் வெளியாக இருக்கிறது.