மெக்டொனால்டு இந்தியாவுக்கு உணவு தரச்சான்று..
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் மெக்டொனால்டு இந்தியா நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் சீஸ் 100 விழுக்காடு உண்மையானது என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இதனை வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட் நிறுவனம் பங்குச்சந்தையில் அறிவித்துள்ளது. இந்தியாவில் மெக்டொனால்ட் நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தையும் வெஸ்ட் லைஃப் ஃபுட் வேர்ல்ட் நிறுவனம் நிர்வகிக்கிறது. தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, உள்ளிட்ட 62 நகரங்களில் 380 கிளைகளை இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அண்மையில் மகாராஷ்டிராவில் உள்ள குறிப்பிட்ட ஒரு உணவகத்தில் தரக்குறைவான சீஸ் பரிமாறப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநில அரசு உடனடியாக ஆய்வு நடத்த ஆணையிட்டது. இந்த நிலையில் தங்கள் நிறுவனத்தில் மாற்று சீஸ் பயன்படுத்துவது இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த வகையான ஆய்வுக்கும் தங்கள் நிறுவனம் தயார் என்று கூறியுள்ள அந்நிறுவன அதிகாரிகள் , ஏற்கனவே அகமது நகரில் ஒரு குறிப்பிட்ட கிளையில் இதுபோன்ற பிரச்னை எழுந்து பின்னர் அது சரி செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். சீஸ் என்று மட்டும் குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம் எங்கு தயாராகிறது என்ற விவரத்தை வெளியிடவில்லை. அவ்வப்போது செய்யப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.