தமிழ்நாட்டில் டாடா மோட்டர்ஸ் ரூ.9,000 கோடி முதலீடு…
கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் தொடங்க இருக்கிறது. வெறும் 2 மாதங்களுக்குள் 2 பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்திருக்கின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவையும் செய்திருக்கிறார்.அதில் தமிழ்நாடு முதலீட்டு ஹப் என்று குறிப்பிட்டு உள்ளார். சிறப்பான வருங்காலத்தை நோக்கி தமிழ்நாடு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஷ்ணு ஐஏஎஸ், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோருடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூத்த உறுப்பினர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைமாறும்போது உடன் இருந்தனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் பிஎம்டபிள்யு, டைம்லர் மற்றும் ஹியூண்டாய் ஆகிய பெரிய நிறுவனங்கள் உள்ள நிலையில் டாடா மோட்டார்ஸும் உற்பத்தையை தொடங்கும் சூழலில் அது மாநிலத்தின் மதிப்பை தேசிய அளவில் உயர்த்தி வருகிறது.