சர்வதேச அளவில் உயர்ந்த அமுல்..
இந்தியாவில் பிரபலமான பால் உற்பத்தி நிறுவனமான அமுல் முதல் முறையாக அமெரிக்காவில் தனது பால் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறது. முதலில் ஒரு கடையை திறந்திருக்கும் அமுல் நிறுவனம் அமுல் பிரஷ் மில்க் என்ற பெயரில் பாலை விற்பனை செய்து வருகிறது. ஒரு வாரத்திற்குள் 4 வகையான பால் ரகங்களை அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் அமெரிக்காவில் திட்டமிட்டுள்ளது. பல ஆண்டுகளாக பால் பொருட்களை விற்றுவந்தாலும் பிரஷ் மில்க் ரகத்தில் பால் விற்பனை செய்யப்படவில்லை என்று கூறியுள்ள அமுலின் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா, 108 ஆண்டுகளாக பால் உற்பத்தி செய்துவரும் மிச்சிகன் பால் உற்பத்தியாளர்களுடன் தொடர்பில் இருக்கிறோம் என்றார். இதன் மூலம் அமெரிக்காவில் கிடைக்கும் பாலை இந்தியர்களுக்கு இந்திய பெயரான அமுலில் விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தியை மிச்சிகன் பால் உற்பத்தியாளர்கள் செய்வார்கள், அதே நேரம் சந்தை படுத்தும் பணிகளை மட்டும் அமுல் செய்ய இருக்கிறது. அமுல் டாஸா, அமுல்கோல்ட், அமுல் சக்தி மற்றும் அமுல் ஸ்லிம் அண்ட் டிரிம் என 4 புதிய பால் ரகங்கள் விரைவில் அமெரிக்காவில் கிடைக்க இருக்கிறது. நியூயார்க்,நியூஜெர்சி, சிகாகோ,வாஷிங்டன், டாலஸ், டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களில் புத்துணர்ச்சியான பால் கிடைக்கும் என்றும் அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் என்ஆர் ஐ மற்றும் ஆசிய மக்கள்தான் தங்கள் விற்பனை இலக்கு என்றும் மேத்தா கூறுகிறார். வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பை அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் மேத்தா குறிப்பிட்டுள்ளார். பனீர், தயிர், மோர் உள்ளிட்ட பொருட்களையும் அமெரிக்காவில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2022-23 நிதியாண்டில் மட்டும் 55,000 கோடி ரூபாய் வருமானத்தை குஜராத் கூட்டுறவு பால் சந்தை படுத்தல் அமைப்பு ஈட்டியிருக்கிறது.அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 18.5 விழுக்காடு அதிகமாகும். ஏற்கனவே அமூலின் தாய் நிறுவனமான குஜராத் கூட்டுறவு பால் சந்தைபடுத்தல் நிறுவனம் 50 நாடுகளில் பல்வேறு பால் பொருட்களை விற்று வருவது குறிப்பிடத்தக்கது.