சரிந்து வரும் வங்கித்துறை வேலைவாய்ப்புகள்..
அனைத்துத்துறைகளிலும் டிஜிட்டல் மயம் புகுந்துள்ளதால் வங்கித்துறையில் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன. பெரும்பாலான வங்கிகளில் நடுத்தரம் மற்றும் கடைநிலை ஊழியர்களின் தேவைகள் டிஜிட்டல் மயத்தால் ஒழிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு அதிகாரிகள் 50 பேர் இருந்தால் அவர்களுக்கு உதவியாளர்களாக 50 பேர் இருந்து வந்தனர். இந்நிலையில் 2023 நிதியாண்டில் இந்த விகிதம் 74க்கு 26 என்ற அளவில் சுருங்கியுள்ளது. டிஜிட்டல் மயத்தால்தான் இத்தனைஆட்குறைப்புகள் நடந்துள்ளதாக கூறப்பட்டாலும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் முழுமையாக களமிறங்கினால் இன்னும் நிலைமை சிக்கலாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்கள் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அண்மையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்தியாவில் மட்டும் இந்த நிகழ்வு நடக்கவில்லை உலகம் முழுவதும் 2013 முதல் 19 ஆம் ஆண்டு வரை வங்கிகளில் பெரிய அளவில் ஆட்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போதைய காலகட்டத்துக்கு தொழில்நுட்பத் திறன் இல்லாவிட்டால் , அது பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், டிஜிட்டல் சார்ந்த பயிற்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காடாக உயரும் என்றும் தற்போது இது 10 விழுக்காடாக உள்ளதாகவும் கூறியுள்ளார். சைபர் தாக்குதல்களும் அதிகளவில் உள்ளன. டிஜிட்டல் நுட்பங்கள், திறன்மேம்பாடு மற்றும் சைபர் தாக்குதல்களை சமாளிக்க வேண்டும் என்றும் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார்.