இது கட்கரியின் கடிதம்..
கட்சி பேதங்களை கடந்து மனதில் பட்டதை தெளிவாக பேசுவதில் வல்லவராக நிதின் கட்கரி உள்ளார். இவர் ஒரு விஷயத்துக்கு குரல் எழுப்பினால் அது மக்களிடம் நல்ல மதிப்பை பெறுவது நிச்சயம். இவர் அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டியை நீக்கக் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் நாக்பூரைச் சேர்ந்த காப்பீட்டு ஊழியர்கள் சங்கத்தினர் தம்மை சந்தித்ததாகவும், அதில் காப்பீட்டுத்துறைக்கு பெரிய சவலாக ஜிஎஸ்டி இருப்பதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறினார். ஆபத்தான காலத்தில் உதவும் என்பதற்காக வாங்கப்படும் காப்பீடுகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியதாக கூறியுள்ளார். மருத்துவக்காப்பீட்டுக்கும் 18 விழுக்காடு வரி விதிப்பதால் மருத்துவக் காப்பீட்டுத்துறையின் வளர்ச்சியும் தடைபட்டுள்ளதாகவும். மருத்துவ காப்பீடுகள் என்பது சமூகத்தில் அடிப்படை தேவையாக இருப்பதாகவும் கடிதத்தில் கட்கரி கூறியுள்ளார். காப்பீட்டு வசதிகளை வருமான வரியில் விலக்கு அளிக்க வகை செய்ய வேண்டும் என்றும் கட்கரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டியை திரும்பப்பெற பரிசீலிக்க வேண்டும் என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்., கடந்த ஜூன் மாதமும் காப்பீட்டு துறையைச் சேர்ந்தவர்கள் நிதியமைச்சரை சந்தித்து மனுவும் அளித்தனர். ஜிஎஸ்டி வரியை காப்பீடுகள் மீது நீக்கினால் மக்கள் பலரும் காப்பீடுகள் வாங்குவார்கள் என்றும் அந்த தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.