தங்கம் விலை ஏன் உயர்கிறது.?
கடந்த 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை அப்போதைக்கு சரிந்திருந்தது. ஆனால் தற்போது தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமாக பல காரணிகளை நிபுணர்கள் முன்வைக்கின்றனர். உலகம் முழுவதும் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகளவில் இருந்து வருகின்றன. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரத்து 508 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. விலை உயர முக்கிய காரணிகள் என்ன என்பதை பார்க்கலாம்.. வரும் செப்டம்பரில் அமெரிக்காவில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் சர்வதேச அரசியல் களம் மாற்றமடைந்துள்ளது. இது தவிர மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகம் வாங்கி வருகின்றன. ETF முறையில் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்னும் வரும் நாட்களில் தங்கம் விலை உயரவே அதிக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 2ஆயிரத்து 500 டாலர்களை கடந்தும் தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் வரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலையற்ற சூழலை சரி செய்ய தங்கம் சிறந்த முதலீடாக இருக்கிறது. தங்கத்தின் மீது முதலீடு செய்ய உகந்த தருணமாக இருப்பதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.