3லட்சம் கார்கள் மாயம்?
கார் உற்பத்தியாளர்களுக்கும் அதனை சந்தைபடுத்தும் டீலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமே நடந்து வருகிறது.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் 2 மாதங்களுக்கு தேவையான கார்கள் அதாவது 7லட்சத்து 30 ஆயிரம் கார்கள் வைத்திருப்பதாக கூறும் நிலையில், கார் தயாரிப்பாளர்கள் 4 முதல் 4.10லட்சம் கார்கள் மட்டுமே அனுப்பியுள்ளதாக கூறியுள்ளனர். இது பற்றி டீலர்கள் சங்கமான FADA ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பான சியாமுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் மொத்த கார்களையும் டீலர்களிடமே தள்ளிவிடுவதாகவும் சாடியுள்ளனர். இது குறித்து பதில் அளித்துள்ள சியாம் அமைப்பின் தலைவர், தங்களுக்கு கடிதம் எழுதுவதற்கு பதிலாக நேரடியாக நிறுவனங்களிடமே இந்த விவகாரம் பற்றி பேசலாமே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சந்தையில் கார்கள் விற்கும் அளவு குறைந்திருக்கும் நிலையில் நிறுவனங்கள் அதிகளவில் டீலர்களிடம் கார்களை தள்ளிவிடுவதாக புகார் எழுந்துள்ளது. 60 முதல் 70 நாட்களாக கார்கள் விற்காமல் தேங்கிக்கிடப்பதாக டீலர்கள் கூறினாலும், 38 நாட்களில் புதிய ஸ்டாக்குகளை அனுப்பி வருவதாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக கார் விற்பனை ஜூலை மாதத்தில் கடுமையாக இந்தாண்டு வீழ்ந்துள்ளது. ஆனாலும் கார் உற்பத்தி நிறுவனங்கள் டீலர்களிடம் சென்றாலே அந்த கார்கள் விற்கப்பட்டதாக கணக்கு காட்டிவிடுகின்றனர். விற்காமல் தேங்கிக்கிடக்கும் கார்களையும் கணக்கில் எடுக்கக்கூடாது என்று FADA அமைப்பு கடுமையாக கேட்டுக்கொண்டுள்ளது. கார்கள் விற்பனையில், வங்கிகள் 42,000கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்குவதாக கூறும் நிலையில், டீலர்கள் வசம் 73ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கார்கள் உள்ளன. மீதமுள்ள 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கு யார் கணக்கு காட்டுவது என்றும் இருதரப்புக்கும் இடையே ஒரு கருத்து யுத்தமே நடந்து வருகிறது.