காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி ரத்தாகுமா..
வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டி ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக்காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டி வரை திரும்பப்பெற பரிசீலிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி அமைச்சரே நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் இதற்காக நாடாளுமன்றத்தில் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி பரிந்துரைகளை ஃபிட்மென்ட் கமிட்டி திட்டமிட்டுள்ளது. தற்போது வரை காப்பீடுகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் நிதியிழப்புகள் குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தனது குடும்பத்தை காப்பாற்ற காப்பீடு எடுக்கும் நபருக்கு மேலும் அதிக சுமையை சுமத்தக்கூடாது என்று நிதின் கட்கரி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதே கருத்தை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் குறிப்பிட்டிருந்தார். . காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பது பொதுமக்களின் அடிப்படை தேவைகளையே பாதிக்கும் என்றும், சாலையில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என்றும் மம்தா கூறியிருந்தார். இந்த நிலையில் காப்பீடுகளுக்கு உள்ளீட்டு வரியை குறைக்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் கோரியுள்ளன. என்ன முடிவை நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு எடுக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.