பிரபல டெக் நிறுவனம் மீது திருட்டுப் புகார்..
பிரபல இந்திய டெக் நிறுவனமாக திகழும் இன்போசிஸ் மீது காக்னிசன்ட்டின் துணை நிறுவனமான டிரைசெட்டோ என்ற நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதில் மருத்துவ காப்பீட்டு மென்பொருள் ஒன்றின் வர்த்தக ரகசியத்தை தங்களிடம் இருந்து இன்போசிஸ் திருடியதாக புகார் எழுந்துள்ளது. காக்னிசண்ட்டுக்கு சொந்தமான தரவுகளை இன்போசிஸ் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி காக்னிசண்ட் பதில் அளிக்கவில்லை. எனினும் குற்றச்சாட்டை இன்போசிஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் நிர்வாக ரீதியிலான பணிகளை செய்வதற்கு டிரைசெட்டோ நிறுவனத்தின் மென்பொருள் பயன்பட்டு வருகிறது.
QNXT என்ற தளத்தில் உள்ள தரவுகளை இன்போசிஸ் நிறுவனம் பயன்படுத்தும் வகையில் புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தங்கள் நிறுவனம் உருவாக்கி வைத்திருந்த தரவுகள் மற்றும் வணிக ரகசியங்களையும் இன்போசிஸ் திருடிக்கொண்டுள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. பெரிய தொகையை காக்னிசன்ட் நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும், நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. இன்போசிஸில் வேலை செய்த ராஜேஷ் வாரியர் என்பவரை காக்னிசன்ட் அண்மையில் பணியில் சேர்த்துள்ளது. தற்போதைய காக்னிசன்ட் சிஇஓ ரவிக்குமாருக்கும் இன்போசிஸில் நீண்டு தொடர்பு உள்ளது. போட்டி நிறுவனமாக இருக்கும் நிலையில் தங்கள் நிறுவன பணியாளர்களை சட்டவிரோதமாக காக்னிசன்ட் பணியில் சேர்த்துள்ளதாக இன்போசிஸ் கூறி வந்த நிலையில் காக்னிசன்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதேபோல் ஜதின் டலால் என்பவரை வேலைக்கு எடுத்தது தொடர்பாக விப்ரோ நிறுவனத்தின் மீதும் காக்னிசன்ட் அமைப்பு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.