பங்குச்சந்தைகளில் ஆஹோ ஓஹோ உயர்வு
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 611 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 698 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் உயர்ந்து 25ஆயிரத்து 10 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. ஹிண்டால்கோ, என்டிபிசி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை ஏற்றத்துடன் லாபம் கண்டன. அப்போலோ ஹாஸ்பிடல், ஹீரோ மோட்டோ கார்ப், அதானி போர்ட்ஸ், எய்ஷர் மோட்டார்ஸ், மாருதி சுசுக்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. Tech Mahindra, JSW Steel உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில், கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் குறைப்பு இருக்கும் என்ற தகவலால் பங்குச்சந்தைகளில் ஏற்றம் ஏற்பட்டது. பொதுத்துறை வங்கிகளைத்தவிர்த்து மற்ற அனைத்துத் துறைபங்குகளும் லாபத்தை பதிவு செய்தன. ஆகஸ்ட் 26 ஆம் தேதி திங்கட்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு மாற்றமில்லை. திங்கட்கிழமை ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 695 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 560 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலையும் மாற்றமின்றி 93 ரூபாயாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 93 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.