250 ரூபாய்க்கு வருகிறது SIP..
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் புதிய SIP திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் மதாபி புரி புச் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் விரைவில் இந்த திட்டம் அமலாக உள்ளதாகவும், உள்ளடக்கிய நிதி பங்களிப்பை அனைவரும் தரும் வகையிலும், அதிகளவிலான மக்கள் பயன்படுத்தும் வகையிலும் இந்த திட்டங்கள் செய்யப்பட இருப்பதாகவும் கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், பரஸ்பர நிதித்துறையுடன் இணைந்து இதை செய்ய இருப்பதாக கூறினார். 250 ரூபாய் முதலீடு செய்யும் வகையிலான திட்டம் வெறும் குறைந்த கட்டணத்தில் முதலீடு செய்வது மட்டுமின்றி அது சார்ந்த தொழில்நுட்பத்தையும் வலுப்படுத்த உதவும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக பங்குச்சந்தையில் உள்ள பரஸ்பர நிதிச்சங்கமான AMFI உடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், 250 ரூபாய் பரஸ்பர நிதித் திட்டத்தை ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் இருந்து தொடங்க இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பண சேமிப்புகளை தேர்ந்தெடுப்பதால் சந்தை சூழல் அதிகரிக்கும் என்றும் அதில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றும் மதாபி கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள பங்குச்சந்தை சார்ந்த தொழில்நுட்பங்கள் உலகில் வேறு எங்கும் கிடையாது என்றும் மதாபி கூறியுள்ளார். பங்குதாரர்கள் மற்றும் சந்தையை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியம் என்றும் மதாபி குறிப்பிட்டார்.