மானியம் தேவைப்படாதாம் சொல்கிறார் நிதின் கட்கரி
அரசியல் எல்லைகளை கடந்து தனது மனதில் பட்டதை போட்டு உடைக்கும் திறமை கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மின்சார வாகனங்கள் குறித்தும் தனது பாணியிலேயே பதில் அளித்துள்ளார். விற்பனையை ஊக்கப்படுத்த அரசு தரும் மானியங்கள் இனி மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு தேவைப்படாது என நினைப்பதாக கட்கரி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே குறைவான ஜிஎஸ்டி இருப்பதால் பல நண்மைகளை அந்த சலுகையே தருவதாகவும், படிம எரிபொருளை குறைக்க மத்திய அரசு யோசித்து வருவதாகவும் அவர் கூறினார். பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்கள் அதிகரித்தால் மாசு குறைவதோடு, படிம எரிபொருள் பயன்பாடு குறையும் என்றும் தெரிவித்தார். விரைவில் முக்கிய நகரங்களுக்கு இடையேயான மின்சார பேருந்து சேவையை மத்திய அரசு தொடங்க இருப்பதாகவும் நிதின் கட்கரி கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் லித்தியம் பேட்டரிகள் ஏற்றுமதியில் இந்தியா பெரிய நாடாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஃபிளக்ஸ் எரிபொருள் வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்கவேண்டும் என்றும் நிதின் கட்கரி, மத்திய நிதியமைச்சரை கேட்டுக் கொண்டார். படிம எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு தற்போது 28 %ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் நிலையில் மின்சார வாகனங்களுக்கு அது வெறும் 5%ஆக உள்ளது. இந்நிலையில், ஃபிளக்ஸ் எரிபொருள் வாகனங்களுக்கு வரியை குறைப்பதை பல மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.