சீன ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புகளுக்கு கூடுதல் வரி..
சீனா மற்றும் வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு அதிகளவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் இந்திய சந்தைகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் வெல்ட் செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புகள் மற்றும் குழாய்களுக்கு ஆண்டி-சப்சிடி டூட்டி எனப்படும் வரியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 10 ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே இந்த வரி இருப்பதாகவும், அதன்படி வியட்நாமில் இருந்து வரும் பைப்புகளுக்கு 12 விழுக்காடு வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 30 விழுக்காடு வரியும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு வரிவிதிப்பதன்மூலம் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வர்த்தக பாதிப்புகளை சீர்செய்யும் இயக்ககம் இது குறித்து கடந்த ஜூன் 15 ஆம் தேதி ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தி, இந்த பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது. அதில் வெளிநாட்டு பைப்புகளுக்கு வரி இல்லாமல் போனால் இந்திய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எளிதில் துரு பிடிக்காமல் நீண்டகாலம் பயன்படுத்தப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இந்தியாவில் அதிகம் புழக்கத்தில் உள்ளது. கட்டட கட்டுமானங்கள், கைப்பிடிகள், எரிபொருள் நிலையங்களில் இந்த வகை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.