சீன செல்போன் லைசன்ஸ்களை நீக்குங்கள்..
இந்தியாவில் மொபைல் ரீட்டெயிலர்கள் இணைந்து மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் சீன நிறுவனங்களின் லைசன்ஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். சீன தயாரிப்புகளான IQoo, போக்கோ, ஒன்பிளஸ் ஆகிய பிராண்டுகளை தடை செய்ய வேண்டும் என்றும், போட்டி விதிகளை மீறி இந்த செல்போன்கள் இயங்கி வருவதாகவும் இதனால் மத்திய அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுவதாகவும் கூறியிருக்கின்றனர். இந்தியாவில் உள்ள 15லட்சம் செல்போன் விற்பனையாளர்களின் பிரதிநிதிகளாக அனைத்து இந்திய மொபைல் ரீட்டெயிலர்கள் சங்கம் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்றும் கோரியுள்ளனர். மின்வணிக நிறுவனங்களுடன் சீன நிறுவனங்கள் கைகோர்த்து போட்டி ஆணைய விதிகளை மீறி இயங்குவதாகவும் இதனால் இந்தியாவில் மற்ற செல்போன்களின் விற்பனை மங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் உரிய ஜிஎஸ்டி கூட கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளனர். இந்திய போட்டி ஆணையம் அண்மையில் 1027 பக்க அறிக்கையை வெளியிட்டது. மின்வணிக கொள்கைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்றும் செல்போன் விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்வணிகத்துக்கு தாங்கள் எதிரி இல்லை என்றும், போட்டியிட தங்களுக்கும் வாய்ப்பு தாருங்கள் என்றுதான் கேட்பதாகவும் செல்போன் விற்பனையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.