பரஸ்பர நிதியிலும் அம்பானியா?
இந்தியாவின் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தில் புதுவரவாக மியூச்சுவல் ஃபன்ட்ஸ் பிரிவையும் இணைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸில் இருந்து தனியாக கடந்த ஜூலை 2023-ல் பிரிக்கப்பட்ட ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கடன்களை வழங்கி வருகிறது. மேலும் தரகு தொழில், பேமண்ட் வங்கி, பேமண்ட் கேட்வே சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது பரஸ்பர நிதி பிரிவிலும் கால்பதிக்க இருக்கிறது. பிளாக்ராக் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனம் பரஸ்பர நிதி வணிகத்தை தொடங்க இருக்கிறது. செபியின் ஒப்புதலும் கடந்தாண்டு ஜூலையில் கிடைத்துவிட்டது. டெலிகாம் துறையைப் போல இல்லாமல், பரஸ்பர நிதி வணிகம் கட்டுக்கோப்பானது.பரஸ்பர நிதிமுதலீட்டில் இந்தியர்கள் இருமடங்காக முதலீடு செய்து வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு மியூச்சுவல் ஃபன்ட்களில் முதலீடு செய்தவர்களின் மதிப்பு 25.48லட்சம் கோடி, தற்போது இது 66.7லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது மாதந்தோறும் சிப் எனப்படும் தவணை முறை முதலீடு இதுவரை இல்லாத வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23,547 கோடி ரூபாயை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் மட்டும் புதிதாக 61லட்சம் பேர் புதிதாக பரஸ்பர நிதியில் இணைந்துள்ளனர். பரஸ்பர நிதியில் முதலீடு செய்வோரில் பெரும்பாலானோர் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களை சேர்ந்தவர்களாவர். ஏற்கனவே டெலிகாமில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் ஜியோ நிறுவனம், அதையே பலமாக வைத்து நிதி சேவையிலும் ஈடுபட்டு வருகிறது. எவ்வளவு தூரம் பரஸ்பர நிதி வளர்கிறது என்பது விநியோகத்தின் அடிப்படையில்தான் இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். பெரிய தாக்கத்தை பரஸ்பர நிதி துறையில் ஏற்படுத்த அம்பானி திட்டமிட்டுள்ளார்.