பேட்டரியை சர்வீஸ் ஆப்சனாக்கும் டாடா மோட்டார்ஸ்..
பேட்டரி வாகனங்களில் முன்னோடியாக திகழும் டாடா மோட்டர்ஸ் நிறுவனம் பேட்டரியை ஒரு கட்டண சேவையை போல மாற்றும் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது. பேட்டரியை மட்டும் வாடகைக்கு விடுவதால் காரின் மொத்த விலை 25 முதல் 30 விழுக்காடு வரை சரிய வாய்ப்புள்ளதாகவும், அதேநேரம் விற்பனை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. பேட்டரியை வாடகைக்கு விடும் இந்த திட்டத்துக்கு பாஸ் (BAAS)என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜேஎஸ்டபிள்யு எம்ஜி நிறுவனம் பேட்டரிகளை வாடகைக்கு விடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனால் அந்த கார்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதே திட்டத்தை டாடா கொண்டுவரும்பட்சத்தில் காரின் விலை சராசரியாக 2 முதல் மூன்றரை லட்சம் ரூபாய் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதே மாடலை பரிசோதித்தபோது அது வாடிக்கையாளர்களை குழப்பும் வகையில் இருந்ததாகவும் டாடா நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 6 மாதங்களாக மின்சார கார்களின் விற்பனை மந்தமாகி வரும் சூழலில் டாடாவின் புதிய திட்டம் கைகொடுக்கம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 16 விழுக்காடு வரை சரிந்திருப்பதாக கூறப்படுகிறது. பேட்டரியை சேவையாக வழங்கும் திட்டம், மின்சார வாகன விற்பனையின் ஆட்டத்தையே மாற்றப்போகும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.