அமெரிக்க மந்தநிலைக்கு 15%மட்டுமே வாய்ப்பு..
உலக வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இந்த நாட்டில் நிலவிய அரசியல் சூழல்கள், பொருளாதார பிரச்சனைகள் காரணமாக 2008-ல் ஏற்பட்டதைப்போலவே ஒரு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவியது.
இந்நிலையில், அடுத்த 12 மாதங்களில் மந்த நிலை ஏற்பட வெறும் 15விழுக்காடு வாய்ப்பு மட்டுமே இருப்பதாக பிரபல ஆய்வு நிறுவனமான கோல்ட் மேன் சாச்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்புத் தரவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் கடந்த செப்டம்பரில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. வேலை இல்லாமல் இருக்கும் மக்களின் விகிதம் 4.1விழுக்காடாக குறைந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்தபடியாக 2 முறை 25 அடிப்படை புள்ளிகளை கடன்கள் மீது குறைக்கும்பட்சத்தில் ஜூன் 2025-ல் வட்டி விகிதம் 3.25 முதல் 3.50விழுக்காடாக குறையும் என்றும் அந்த நிறுவனம் கணித்துள்ளது. கடந்த செப்டம்பரில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் முதல் முறையாக கடன்கள் மீதான வட்டி விகிதம் 4.75-5.00விழுக்காடாக குறைத்தது. இந்த குறைப்பு கடந்த 2020-க்கு பிறகு நடக்கும் முதல் குறைப்பாகும். அமெரிக்காவில் தற்போது வேலை இழப்புக்கான வாய்ப்பு குறைந்து வருவதாகவும் கோல்ட்மேன்சாச்ஸ் அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் அக்டோபரில் சூறாவளி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், அக்டோபர் மாத வேலைவாய்ப்பு தரவுகள் மிகவும் மோசமானதாகவும், சவால் நறைந்ததாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க பங்குச்சந்தைகளில் தற்போது உள்ள ஏற்றங்கள் என்பது தற்காலிகமானது என்றே பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்