68,000 அமெரிக்க டாலர் கேட்ட ஹேக்கர்..
இந்தியாவின் பிரபல மருத்துவ காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் தரவுகள் அண்மையில் இணையத்தில் கசிந்தன. வாடிக்கையாளர்களின் பெயர், தனித்தகவல்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்நிலையில், தரவுகளை திருடிய சைபர் ஹேக்கர், தனக்கு 68 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பணம் தரவேண்டும் என்று அச்சுறுத்தியுள்ளதாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஹேக்கரின் இந்த செயல்களால் ஸ்டார் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11 விழுக்காடு வரை கடந்த வாரத்தில் குறைந்தது. தகவல் கசிவு சம்பவம் குறித்து நிறுவனத்திற்குள்ளேயே விசாரணை நடப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்திய பங்குச்சந்தைகள், ஸ்டார் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளன. டெலிலகிராம் மூலம் தங்கள் நிறுவன தரவுகள் விற்கப்படும் நிலையில் இதுபற்றி சட்ட நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும் ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தகவல்களை திருடிய ஹேக்கர் யார் என்பது குறித்து தெரிந்துகொள்ள, இந்திய சைபர் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் ஸ்டார் நிறுவனம் கூறியுள்ளது. தகவல் கசிவு தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டதும் தனித்தகவல்களை வழங்கும் பாட்ஸ்களை நீக்கிவிட்டதாக டெலிகிராம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.