அடுத்த பெரிய பாதிப்பு இதுதான்…
அமெரிக்காவில் பொதுக்கடன் அதிகரிப்பே பல பாதிப்புகளுக்கு காரணமாக அமையப்போகிறது என்று அமெரிக்காவுக்கு, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரோம் நகரில் பேசிய அவர், மலைபோல பொது கடன்களை குவித்து வைத்திருக்கும் நாடுகள் அடுத்த பேரிடர், மற்றும் அவசர நிலை வரும்போது தடுமாற நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். உலக பொருளாதார மந்தநிலை மற்றும் பெருந்தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ள ரகுராம் ராஜன், அடுத்த 100 ஆண்டுகளில் திடீரென பல பெருந்தொற்றுகள் வரவும் வாய்ப்புள்ளதாகவும், எனவே கடன்களை குறைப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் கடன் மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள ரகுராம் ராஜன், அமெரிக்காவின் நிதியமைச்சராக யார் நியமிக்கப்படுவாரோ அவர் மீது பெரிய சுமை காத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார். உலகளவில் பொதுக்கடன் 100 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்பட்சத்தில் அதில் 93 % அமெரிக்கா மற்றும் சீனா உடையதாக இருக்கும் என்றும் சர்வதேச நாணைய நிதியம் கூறியதை ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டியுள்ளார். கடன்களை குறைத்துவிட்டு, பிறநாடுகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதிகரிக்கும் கடனால் பிறநாடுகளுக்கு உதவ முடியாத சூழல் ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். வருங்காலத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து விருது பெற்ற பிறகு ரோம் நகரில் ரகுராம் ராஜன் இவ்வாறு பேசியுள்ளார்.
சேவைகள் தொடர்பான பணிகள் மற்றும் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணிகள் நடக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.