வாரனின் புதுக்கணக்கு..
பிரபல நிறுவனமான கொக்ககோலாவில், அமெரிக்க மூத்த முதலீட்டாளர் வாரன் பஃப்ஃபெட் செய்த முதலீடு காரணமாக இந்தாண்டு டிவிடண்ட்டாக 776 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறப்போகிறது. கொக்க கோலா நிறுவனம் தனது காலாண்டு வருவாயை வெளியிட்டு டிவிடண்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதில் 48.5 % அளவுக்கு டிவிடண்ட் அதிகமாக தரப்பட்டுள்ளது. 40 கோடி பங்குதாரர்களுக்கு இந்த டிவிடண்ட் வழங்கப்பட உள்ளது. இதில் பஃப்பெஃட்டின் பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்துக்கு பெரிய பங்கு பணம் கிடைக்க இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக கொக்க கோலா நிறுவனத்தில் வாரன் தனது முதலீட்டை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொக்க கோலா நிறுவனத்தின் வாழ்நாள் ரசிகரான வாரன், தினசரி கோக் குடித்து வருகிறார். தனது ஒரு நாள் உணவில் கால் பங்கு கோக்காகவே இருக்கிறது என்று கடந்த 2015 ஆம் ஆண்டே வாரன் தெரிவித்திருக்கிறார். கொக்க கோலாவில் மிகப்பெரிய முதலீடு செய்திருந்தாலும், வாரனுக்கு கோக் நிறுவனம் எந்த சிறப்பு சலுகையும் தரவில்லை. பெப்சி நிறுவனத்துக்கு பதிலாக கொக்க கோலா நிறுவனத்துக்கு வாரன் மாறியது ருசிகரமான கதை. 50 ஆண்டுகளாக பெப்சியை குடித்து வந்த வாரன், கடந்த 1980களில் பெப்சியில் இருந்து கொக்க கோலா நிறுவனத்துக்கு மாறினார். வாரனின் வீட்டின் அருகே வசித்த டான் கியோக்தான் பிற்காலத்தில் கொக்க கோலாவின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மாறியிருந்தார். செர்ரி கோக் என்ற பெயரில் கியோக் அளித்த குளர்பானத்தை வாரன் குடித்தபிறகு பெப்சியில் இருந்து கோக்குக்கு மாறினார்.