வங்கிகளில் வருகிறது புதிய வசதி..
வங்கிகளில் இணைய வழியில் பணம் அனுப்பும்போது மோசடிகள் மற்றும் பிழைகளை குறைக்கும் வகையில் ஆர்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் ஆகியவற்றில் யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவர்களின் பெயர் வெரிஃபை செய்யும் வசதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த வசதி வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது வரை யுபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் ஆகிய வழி பரிவர்த்தனைகளில் பணத்தை பெறுவோரின் பெயர் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஆர்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் ஆகியவற்றில் இந்த வசித இல்லை. இதனால் ஒரு எண் மாறினாலும் வேறொருவர் பெயருக்கு பணம் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே இதனை தடுக்கும் நோக்கில் புதிய வசதி குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணப்பரிமாற்றத்தை டிஜிட்டல் உள்கட்டமைப்பாக மாற்றும் முயற்சியை ரிசர்வ் வங்கி முன்னெடுத்து வருகிறது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மிகவும் அவசியமாகும். பணம் சரியான நபருக்குத்தான் செல்கிறதா என்று வெரிஃபை செய்யும் வசதியை ஆர்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் வசதியில் உறுதி செய்ய வேண்டும் என்று அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. சைபர் மோசடிகள், தெரியாத நபருக்கு பணம் அனுப்புவதை தடுக்க இதனை எவ்வளவு முடியுமோ அத்தனை விரைவாக செய்ய வேண்டும் என்று நீதிபதி பிரதீபா எம் சிங் கூறியிருந்தார். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட ரிசர்வ் வங்கி வரும் ஏப்ரல் மாதத்திற்குள் மக்களுக்கு இந்த வசதியை அளிக்க இருக்கிறது.