டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா அறிவுறுத்தியது என்ன?

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமாக டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனத்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறையான USFDA அமைப்பு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதில், மருந்து மூலக்கூறில் உள்ள பிரச்சனைகளையும், ஐதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் உள்ள ஆலையில் உள்ள பிரச்சனைகளையும் சரி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. கடந்தாண்டு நவம்பர் 19 ஆம் தேதி அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு நடத்தியதாகவும், அதில் சில அம்சங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று தங்களுக்கு அறிக்கை கிடைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆலை தரப்பில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய வாய்ப்பு வழங்குவதாகவும் USFDA தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த மருந்து நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு 2.5% லாபத்தை பதிவு செய்கிறது. அதாவது டிசம்பர் 31 -ஆம் தேதியுடன் முடிவடைந்த 3 ஆவது காலாண்டில், டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் லாபம் ஆயிரத்து 413 கோடி ரூபாயாக கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 15.9 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், கடந்தாண்டு 7215 கோடி ரூபாயாக இருந்த வருவாய் தற்போது 8359 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. வரி பிடித்தம்போக அந்நிறுவனத்தின் வருவாய் 2,298 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை வர்த்தக நேர முடிவில் அந்த நிறுவன பங்குகள் 3.28% சரிந்து 1126.55 ரூபாயாக விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது