பரஸ்பர நிதியில் ஆர்வம் சரிவு..

இந்திய பங்குச்சந்தைகளில் ஜனவரி மாதத்தை விட ஃபிப்ரவரி மாதத்தில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் விகிதம் 26 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த ஜெனவரியில் 36,687.78 கோடி ரூபாயாக இருந்த முதலீடு, கடந்த மாதம் 29,303.34 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
இந்திய பரஸ்பர நிதி சங்கமான ஏஎம்எஃப்ஐ இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அளவு குறைந்துள்ளபோதும், தொடர்ந்து 48 ஆவது மாதமாக சாதகமான சூழலில்தான் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் வணிக பதற்ற நிலை, இந்திய பங்குச்சந்தைகளில் நிறுவன பங்குகள் அதிக மதிப்பு மற்றும் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறி வருவது ஆகியவை நிலைமையை சிக்கலாக்கியுள்ளது. அதேநேரம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்த சூழலை சிறப்பாக கையாண்டு முதலீடுகளை குவித்து வருகின்றனர். 5,711 கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. சிறு மற்றும் நடுத்தர முதலீட்டு நிதிகள் சந்தையில் ஆரோக்கியமான போக்கை ஏற்படுத்தி வருகிறது. பெரிய மூலதன முதலீட்டு விகிதம் வெறும் 6.4 விழுக்காடு மட்டுமே பிப்ரவரியில் குறைந்துள்ளது.
மாதந்தோறும் பணத்தை முதலீடு செய்யும் சிப் முதலீடுகள் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்து 25,999 கோடி ரூபாயாக உள்ளது. நிலையான வருமானபிரிவில், டெப்ட் மியூச்சுவல் ஃபன்ட்ஸ் என்ற நிதியின் வெளியேறிய விகிதம் ஃபிப்ரவரியில் 6,525 கோடி ரூபாயாக இருந்தது. அதேநேரம் இந்த பிரிவில் ஜனவரியில் 1.28 லட்சம் கோடி ரூபாய் நிதி முதலீடு செய்யப்பட்டது. நிலைத்தன்மையை நோக்கித்தான் முதலீட்டாளர்களின் கவலைகள் இருக்கின்றன. இந்தியாவின் ரெபோ வட்டி விகிதம் 6.25விழுக்காடு மற்றும் நுகர்வோர் விலை பணவீக்க குறியீடு 4.31விழுக்காடு ஆகியவை சாதக சூழலை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.