LG அதிரடி update :
தென் கொரிய குழுமமான LG-யின் இந்திய துணை நிறுவனமான LG எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், அக்டோபர் 7 ஆம் தேதி தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) தொடங்க உள்ளது.
பங்கு விற்பனை அக்டோபர் 9 ஆம் தேதி வரை சந்தாவிற்காக திறந்திருக்கும், அதே நேரத்தில் நங்கூர முதலீட்டாளர்களுக்கான (anchor investors) ஏலம் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கும் என்று செவ்வாய் அன்று இந்நிறுவனம் தாக்கல் செய்த முன் வெளியீடு தகவல் அறிக்கையில் (Red herring prospectus) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ள இரண்டாவது தென் கொரிய நிறுவனம் இதுவாகும்.
LG எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா, கடந்த டிசம்பரில், பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியிடம், ஒரு IPO-விற்காக தனது முதற்கட்ட ஆவணங்களை தாக்கல் செய்தது. இதன் தாய் நிறுவனமான LG வசம் உள்ள பங்குகளில் சுமார் 15 சதவீத பங்குகளை, அதாவது 10.18 கோடி பங்குகளை இதன் மூலம் விற்பனை செய்ய உள்ளது.
மார்ச் மாதத்தில் பொதுப் பங்கு வெளியீட்டிற்கான ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெற்றது. மொத்த வெளியீட்டு அளவை இது வெளியிடவில்லை, ஆனால் IPO அளவு ரூ.15,000 கோடியாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த பொது வெளியீடு முற்றிலும் பழைய பங்குகள் விற்பனை (OFS) என்பதால், LG எலக்ட்ரானிக்ஸ் இந்தியா இதன் மூலம் எந்த வருமானத்தையும் பெறாது. திரட்டப்படும் நிதி முழுவதும் தென் கொரிய தாய் நிறுவனத்திற்குச் செல்லும்.
இந்த நிறுவனம் சலவை இயந்திரங்கள், குளிர்சாதன பெட்டிகள், LED டிவி பேனல்கள், இன்வெர்ட்டர் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மைக்ரோவேவ் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து, உள்நாட்டில் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்கிறது. இது நொய்டா (உத்தர பிரதேசம்) மற்றும் புனேவில் உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது.
மார்ச் 31, 2024 அன்று முடிவடைந்த நிதியாண்டில் LG எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் வருவாய் ரூ.64,087.97 கோடியாக இருந்தது.
