TCS வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்..
ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், நீண்ட காலமாக பணியாற்றி வரும் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து நோட்டீஸ் அளித்துள்ளது.
அவர்களின் திறன்கள் நிறுவனத்தின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு பொருந்தாத வகையில் உள்ளதாக தெரிவித்து, பணிநீக்கப் பொதிகளை வழங்குவதாக மணிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் ஆட்டோமேஷனுக்கு ஏற்ப டிசிஎஸ் அதன் ஊழியர்கள் குழுவை மாற்றி அமைத்து வருகிறது.
தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற திறன்கள் குறைவாக கொண்ட ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப திறமைகளை மேம்படுத்தாத ஊழியர்களை இந்த மறுசீரமைப்பு பாதிக்கிறது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மூன்று மாத அறிவிப்பு கால ஊதியமும், அதைத் தொடர்ந்து பதவிக்காலத்தைப் பொறுத்து ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான சம்பளம் வரை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
•பதவிக்கால அடிப்படையிலான பணிநீக்கம்: 10-15 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு சுமார் 1.5 ஆண்டு சம்பள தொகையை பணி நீக்கத்தின் போது பெறலாம். 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்களுக்கு அதிக தொகை வழங்கப்படும்.
- பெஞ்ச் ஊழியர்கள்: எட்டு மாதங்களுக்கும் மேலாக பணிகள் எதுவும் ஒதுக்கப்படாத ஊழியர்களுக்கு மூன்று மாத அறிவிப்பு ஊதியம் மட்டுமே கிடைக்கும்
- முன்கூட்டியே ஓய்வு: ஓய்வு பெறவிருக்கும் ஊழியர்களுக்கு, “டிசிஎஸ் கேர்ஸ்” திட்டத்தின் கீழ், முழு ஓய்வூதிய சலுகைகள், காப்பீடு மற்றும் பதவிக்காலத்தைப் பொறுத்து ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான கூடுதல் பணிநீக்க தொகுப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
கடந்த ஜூலையில் டிசிஎஸ் அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2 சதவீதத்தை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. 613,069 ஊழியர்களில் 12,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டது. இது இந்நிறுவனத்தின் வரலாற்றில் இரண்டாவது குறிப்பிடத்தக்க பணிநீக்க நடவடிக்கையாகும். 2012இல், செயல்திறன் குறைவாக இருந்ததால் சுமார் 2,500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
