டிஜிட்டல் தங்க நிறுவனங்கள் கதறல்
இந்திய பங்கு சந்தைகள் ஒழுங்குமுறை ஆணையம் டிஜிட்டல் தங்க நிறுவனங்களை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று அந்நிறுவனங்கள் கோரியுள்ளன. நவம்பர் 8 ஆம் தேதி, டிஜிட்டல் தங்கம் அதன் வரம்பிற்குள் இல்லை என்று முதலீட்டாளர்களுக்கு செபி எச்சரித்தது.
அது பத்திரச் சட்டங்களின் கீழ் வரவில்லை என்றும், அது ஒரு பண்டங்களுக்கான டிரைவேட்டிவாக வகைப்படுத்தப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியது. இதைத் தொடர்ந்து, இந்திய தங்கம் மற்றும் நகை வணிகர்களின் சங்கம் (IBJA), நவம்பர் 10ல், டிஜிட்டல் தங்கத்தை ஒழுங்குபடுத்துமாறு செபிக்கு ஒரு கடிதம் அனுப்பியது.
அந்தக் கடிதத்தில், “பல்வேறு டிஜிட்டல் தங்க நிறுவனங்கள் எங்களை அணுகியுள்ளன. செபி அல்லது நீங்கள் பரிந்துரை செய்யும் வேறு எந்த ஒழுங்குமுறை நிறுவனம் மூலமாகவோ ஒழுங்குபடுத்தப் படுவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. “டிஜிட்டல் தங்க நிறுவனங்கள் பற்றி எச்சரிக்கையை வெளியிடுவது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று நாங்கள் உறுதியாக உணர்கிறோம். ஆனால் அதை ஒழுங்குபடுத்த வழிகாட்டுதல்களை வெளியிடுவது முதலீட்டாளர்களுக்கும் டிஜிட்டல் தங்க நிறுவனங்களுக்கும் உதவும்” என்று அது மேலும் கூறியது.
செபி இவற்றை ஒழுங்குபடுத்த மறுத்தால், டிஜிட்டல் தங்க நிறுவனங்கள், தங்களை சுயமாக ஒழுங்குபடுத்திக் கொள்ள, மத்திய அரசிடம் அனுமதி கோரக்கூடும் என்று இந்த சங்கத்தின் உயர் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
மோசடி செய்பவர்களை அகற்றவும், வாடிக்கையாளர்களுக்கு முறையான குறை தீர்க்கும் வழிமுறையை வழங்கவும் ஒரு ஒழுங்குமுறை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று டிஜிட்டல் தங்க நிறுவனங்களின் கூட்டமைப்பு நீண்ட காலமாகக் கோரியுள்ளது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
“செபி டிஜிட்டல் தங்கத்தை ஒழுங்குபடுத்த விரும்பவில்லை என்றால், அந்தத் துறை ஒரு சுய-ஒழுங்குமுறை அமைப்பை (SRO) உருவாக்கி, ஒப்புதலுக்காக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை அணுகும்,” என்று IBJA-வின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறினார்.
செபியின் எச்சரிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் தங்கத்தை வழங்கும் ஃபின்டெக் தளங்கள் பயனர் திரும்பப் பெறுவதில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிப்பு கண்டதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் நவம்பர் 12 அன்று செய்தி வெளியிட்டது
