MUFG திட்டவட்டம்!!
ஜப்பானின் மிகப் பெரிய கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான மிட்சுபிஷி யுஎஃப்ஜே ஃபைனான்சியல் குரூப் (MUFG) வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனமான (NBFC) ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் (SFL) நிறுவனத்தில் 20 சதவீதத்திற்கு பங்குகளை வாங்கியது. இந்நிலையில் இந்த விகிதத்தை மேலும் அதிகரிக்கத் திட்டமிடவில்லை என்று தெரிவித்தது. MUFG, ஸ்ரீராம் குழுமத்தின் வேறு எந்த நிறுவனங்களிலும் முதலீடு செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய MUFG குழுமத்தின் உலகளாவிய வர்த்தக வங்கிப் பிரிவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) யசுஷி இடகாகி, தமது நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மை பங்குதாரராகத் தனது நிலையில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். ஸ்ரீராம் குழுமத்தின் வேறு எந்தப் பிரிவுகளிலும் முதலீடு செய்ய அதற்கு ஆர்வமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“தற்போது, 20 சதவீதத்திற்கு மேல் செல்வதற்கான எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை” என்று இடகாகி கூறினார். மேலும் MUFG உள்ளூர் பிராண்டிங்கை மதிக்கிறது என்றும், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பெயர் மாறாமல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
SFL-இன் இயக்குநர்கள் குழு, திங்களன்று, 20 சதவீத பங்குக்கு ஈடாக 440 கோடி டாலர் முதலீடு செய்வதற்காக MUFG வங்கியுடன் ஒரு திட்டவட்டமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளித்தது.
இந்த பரிவர்த்தனையின் கீழ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அதன் நிறுவனர்கள் 5 சதவீத பங்குகளைக் குறைப்பார்கள். மற்ற பொதுப் பங்குதாரர்கள் 15 சதவீத பங்குகளைக் குறைப்பார்கள். இது அவர்களின் பங்குகளை முறையே 20.3 சதவீதம் மற்றும் 59.7 சதவீதமாகக் குறைக்கும். இது இந்தியாவின் நிதிச் சேவைத் துறையில் செய்யப்படும் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் ஒன்றாக இருக்கும்.
வெள்ளிக்கிழமை முதன்முதலில் அறிவிக்கப்பட்ட MUFG வங்கியின் இந்த முன்மொழியப்பட்ட முதலீடு, பங்குதாரர்களின் ஒப்புதல், ஒழுங்குமுறை அனுமதிகள் மற்றும் வழக்கமான நிறைவு நிபந்தனைகளுக்கு உட்பட்டது. முதலீடு முடிந்ததும், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இரண்டு இயக்குநர்களை நியமிக்க MUFG திட்டமிட்டுள்ளது.
டோக்கியோவைச் சேர்ந்த இந்த வங்கி, இந்தியாவில் உள்ள தனது கிளைகள் மூலம் மொத்த மற்றும் பெரு நிறுவனப் பிரிவுகளில் அதன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் என்றும், துணை நிறுவன மாதிரியை ஆராயாது என்றும் இடகாகி கூறினார். இந்தியாவில் கிஃப்ட் சிட்டியில் உள்ள ஒரு கிளை உட்பட ஆறு கிளைகள் அதற்கு உள்ளன.
